எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Monday, March 5, 2012
                                                        திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் பேசுகிறார் 

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இயக்கத்தின் பொருளாளர் பொறியாளர் திரு.சுப்பிரமணியன், இயக்க செயலாளர் ஐ.கோபால்சாமி ,  மாவட்ட விவசாய கூட்டமைப்பு தலைவர் திரு ஜோசப், சிவந்திபுரம் பஞ்சாயத்து துணை தலைவர். திரு பிராங்கிளின் , திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் திரு.K. முருகன், சேனைத்தலைவர் பள்ளியின் தாளாளர் திரு லாரன்ஸ், அம்பை வட்டார காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு அம்பை ஆவுடையப்பன்,கலை, இலக்கிய பெருமன்ற தலைவர் திரு சிலம்புராமசாமி,கவுன்சிலர்.திரு.டேவிட் டேனியல், இயக்க துணைத்தலைவர். திருமதி விஜயா, துணை செயலாளர். திருமதி பிரபாவதி,  மேலும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள்,விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிதிகள், மகளிர் கூட்டமைப்பினர், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நதியை பற்றி வந்திருந்தவர்கள் பேசியவற்றில் இருந்து சில...


பொதிகையில் தொடங்கி தூத்துக்குடி புன்னைகாயல் வரை பயணித்து கடலில் சங்கமாகும் நதி தாமிரபரணி. தமிழ்நாட்டில்  33 நதிப்படுகைகளில் கொஞ்சம் உயிருடன் இருப்பது தாமிரபரணி மட்டுமே...தமிழ் நாட்டில் உருவாகி இங்கேயே கடலில் சங்கமாகும் ஒரே நதி இது . 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட  நிலங்கள் தாமிரபரணி நதியால் பயன் பெறுகின்றன. இரண்டு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற சிறப்புமிக்க நதி இன்னும் சில வருடங்களில் செத்து போகக்கூடிய ஜீவநதி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை கொள்கிறார்கள்.

20,000 ஆண்டுகள் காப்பாற்றப்பட்டு வந்த நதி இன்னும் இருபது ஆண்டுகளில் அழிய போகிறது...!! அமலை செடிகளின் ஆக்கிரமிப்பு, ஆஸ்பத்திரி கழிவுகள், தொழிற்சாலை கழிவு நீர், கொட்டப்படும் குப்பைகள், சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி பலவும் நதியை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. இவை எல்லாம் சேருவதால் குடிநீர் மாசு பட்டு குடிக்கவே தரமற்றதாகவும் போய்விடுகிறது. பொதிகைமலையின் அரிய மூலிகைகள் சேர்ந்த மிகவும் சுவையான நதி நீர் வழி நெடுகிலும் மாசுபட்டுக்கொண்டே சென்று ஸ்ரீவைகுண்டம் அருகே குடிக்க சரியில்லாத தண்ணீராக போய்விடுகிறது. நீர் பகுப்பாய்வை மேற்கொண்டதில் 1 லிட்டர் ஆற்று நீரில் 1750 நுண்கிருமிகள் மற்றும் பிற கழிவுகள் இருக்கிறதாம்...!!

நதியை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை, இது பொது சொத்து. அந்தந்த பகுதி மக்களுக்கானது. இதை பலரும் மறந்துவிடுவதால் அழிவினை நோக்கி போய் கொண்டிருக்கிறது நம் பொக்கிஷம். தவிரவும் பாபநாசம் பகுதியில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளின் போது அதிக அளவில் வஸ்திரம், பூமாலைகள், இலை, கவர்கள், காகிதங்கள், பாட்டில்கள்,உணவு மிச்சங்கள் போன்றவை மலையென குவிந்து கிடக்கிறது. தமிழக அறங்காவல் துறையினர் இதனை சிறிது ஒழுங்கு படுத்தினால் நல்லது, ஆனால் செய்வதில்லை. சுற்றுலாத் தலமான இங்கே  கழிப்பறை வசதிகள் சரியாக இல்லாததால் ஆற்றங்கரை, கோவில் பகுதிகளில் செய்யப்படும் அசிங்கங்கள் மிக அதிகம் !!


அடுத்து முக்கியமானது ஆற்றில் மண் எடுப்பது...தண்ணியை சுத்திகரிக்ககூடியது மண்...ஆனால் பல அடிகள் ஆழம் தோண்டி எடுக்கபடுகின்ற மண்ணினால் இந்த சுத்திகரித்தல் தடைபடுகிறது. தவிரவும் ஆழம் இருப்பது தெரியாமல் அந்த குழிகளில் விழுந்து மாண்டவர்கள் பலர். இங்கிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மண் செல்கிறது, அங்கே ஆறுகளில் மண் எடுக்க மாட்டார்கள், எடுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க படுகிறது. ஆனால் இங்கே மண் எடுப்பவர்களை தடுத்தால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் !!! வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் மண் எடுப்பதை எதிர்த்ததால் சமூக விரோதிகளால் கொல்ல பட்டார்...!?   

மணல் எடுப்பதற்காக ஆற்றுக்குள் சாலை போடப்படுவது சகஜமாகி விட்டது.கீழநத்தம் பகுதியில் ஒரு பாலமே போட்டு மணல் எடுத்து செல்லபடுகிறது.இதன் வழியாக 200 மணல் லாரிகள் வரை தினம் பயணிக்கின்றன...இந்த சாலைகள் மிக நேர்த்தியாக போடபட்டிருக்கின்றன...இச்சாலைகளை சரியாக பராமரித்து வரவேண்டும் என்று சில அதிகாரிகள் சொல்வது அதிக பட்ச நகைச்சுவை !!

மணல் அள்ளுவதற்கு எதிராக திரு நல்லகண்ணு அவர்கள் கோர்ட்டில் போட்ட வழக்கின் தீர்ப்பின் படி,

ஆற்றின் குறுக்கே போட பட்ட சாலைகளை அகற்றணும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆற்றை கண்காணிக்க 'கண்காணிப்பு குழு' அமைக்க சொல்லப்பட்டதும் நிறைவேற்றப்படவில்லை

மணல் அள்ளக்கூடாது என்று போடப்பட்ட தடையே 5 ஆண்டுகள் தான் அதில் 2  ஆண்டுகள் முடிந்தும் ஏதுவும் இன்றுவரை சரியாக நிறைவேற்றப்படவில்லை.

ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் 

திருவள்ளுவர் கல்லூரி முதல்வரும், சேனைத் தலைவர் பள்ளியின் தாளாளர் திரு லாரன்ஸ் இருவரும் பாதுகாப்பு இயக்கத்தின் அனைத்து பணிகளிலும் உடன் இருப்பதாகவும், களப்பணியில் தங்களது மாணவர்களை ஈடுபடுத்தி கொள்ள முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது அனைவரின் வரவேற்ப்பை பெற்றது. அதிலும் திரு லாரன்ஸ் அவர்கள் இந்த இயக்கத்தை மாணவர்கள் இயக்கமாக மாற்றினால் இன்னும் சிறப்பு என்றார். 

பொதிகை முதல் புன்னைகாயல் வரை 1 லட்சம் நபர்களை சந்திக்க வேண்டும். வருகிற மார்ச் 8 அன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு வழக்கமாக நடக்கும் பெண்கள் பேரணி இந்த தாமிரபரணி பாதுகாப்புக்காக நடைபெற வேண்டும் என்று ஆலோசனை சொல்லப்பட்டு உடனே முடிவும் செய்யப்பட்டது. இந்த ஆண்டை விழிப்புணர்வு ஆண்டாக எண்ணி கொண்டு அனைவரும் செயல்படவேண்டும் எனவும் ஆலோசனைகள் சொல்லப்பட்டது.

ஆலோசனை கூட்டம் நல்லவிதமாக நடைபெற்று முடிந்தது. இறுதியில் மூன்று தீர்மானங்கள் போடபட்டு நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

* விக்கிரமசிங்கபுரத்தில் இருக்கும் ஆலை கழிவு நீரை சுத்திகரித்து தான் ஆற்றில் விடுகிறோம் என்று கூறிகொண்டிருக்கிறது. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதே பலரது கருத்து. அவ்வாறு சுத்திகரித்து தான் ஆற்றில் விடபடுகிறதா என கண்காணிக்க மக்கள் இயக்கத்தை அனுமதிக்க வேண்டும்.

* ஊரின் பல பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆற்றில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது.

* பாபநாசம் முதல் சிவந்திபுரம் வரை மாபெரும் பேரணி ஒன்றை மார்ச் 29 அன்று நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த மூன்று தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பல கட்சியினர்கள் பங்குகொண்டாலும், வந்திருந்த யாரிடமும் கட்சி அடையாளங்கள் இல்லை. அவர்களுக்குள் நதி குறித்த கவலை மட்டும் தான் தெரிந்தது. 'அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நடைபெறும் பேரணிக்கு வரவைக்கலாம், அந்த பொறுப்பை நான் ஏற்றுகொள்கிறேன்' என்று சொன்னது எம்.எல்.ஏ கட்சியை சார்ந்தவர் அல்ல...! தினகரன் பத்திரிக்கைதான் ஆற்றினை குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவதாக கூறியவர் வேறு கட்சியை சேர்ந்தவர். இவ்வாறு அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்கள் காட்டிய ஆர்வம் போற்றுதற்குரியது.

தாமிரபரணி கூவமாக மாறிவிடும் முன் காப்பாற்றப்படவேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக அங்கே ஒலித்தது.

ஒரு நல்ல முயற்சியின் ஒரு நல்ல தொடக்கமாக இந்த ஆலோசனை கூட்டம் இருந்தது. 
0 comments: