எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Friday, July 13, 2012
தாமிரபரணியை சுத்தபடுத்தும் பணிகள் தீவிரம்
 
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை பலரும் பல கட்டங்களில் மேற்கொண்டும் நதி மாசு படுவது குறைந்தபாடில்லை.  பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள்,செப்டிக்டேங்க் கழிவுகள், விவசாய உரம், பூச்சிமருந்து கழிவு, ஆயில் கழிவு,சாக்கடை கழிவுகள், அமலைச் செடிகள், முட்செடிகள் மற்றும் காணாமல் போகும் மணல் போன்றவற்றால் நதி கூவமாகி கொண்டிருக்கிறது. ஆற்று நீரின் அருமையான சுவை மாறிவிட்டது, தவிரவும் குடிக்கவே அச்சப்பட கூடிய நிலையில் இருக்கிறது இதன் அமிலத்தன்மை !!  விளைவு நதியின் அருகில் வசித்தும் கடையில் மினரல் வாட்டர் கேன் வாங்கும் அவல நிலை !?

நதியை பாதுகாப்பதை குறித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தும் ஏனோ இதுவரை அவ்வளவாக கண்டுக்கொள்ளபடாமலேயே இருந்து வந்துள்ளது வேதனை.
இந்நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களை  இணைத்து ஏற்படுத்தப்பட்ட தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் நதியை சுத்தபடுத்த முழு முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது.  இந்த இயக்கத்தின் சார்பில் கடந்த நாலு மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆற்றின் கரையோர பகுதி மக்களிடையே நதியை பாதுகாப்பதின் அவசியம்  குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், கூட்டங்களை நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

மேலும் இயக்கத்துடன் இணைந்து போலீஸாரும் பணியாற்றுவார்கள் என்று மாநகர கமிஷனர் திரு கருணாகரன் உறுதி அளித்திருந்தார். அதன் படியே   கடந்த சில வாரங்களாக நெல்லையில் பல வியத்தகு செயல்களை செயல்படுத்தியும்  வருகிறார். நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் பகுதியில் ஆற்றை சுத்தபடுத்தும் பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கி வைத்ததில் இருந்து இன்று வரை வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகின்றன. ஆயுதப்படை போலிஸார், ஊர்காவல் படையினர், மாநகராட்சி ஊழியர்கள் , தீயணைப்புப் படை  வீரர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் நடக்கிறது.

கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வெகு துரிதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக புதனன்று(11-7-12) அன்று தாமிரபரணி  நதியின் தொடக்க இடமான பாபநாசம் பகுதியில் ஆற்றுக்குள் குப்பைகள், கழிவுகள் அகற்றும்  மாபெரும் பணி ஒன்று நடை பெற்றது. இப்பணியினை திரு இசக்கி சுப்பையா எம் எல் ஏ அவர்களின் தலைமையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர்,அம்பை அரிமா சங்கத்தினர், ஊர் காவல் படையினர், திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.



பாவத்தை போக்கும் பாபநாசம் 

பாபநாசத்தில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் போடப்படும் கழிவுகள் தான் நதி எங்கும்  நிறைந்து கிடந்தன...

நவ கைலாயங்களில் முதன்மையான சூரியஸ்தலமான பாபநாசம் பாவங்களை போக்கும் ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் இங்கே  பித்ரு காரியங்கள் செய்யவும், தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யவும் தினந்தோறும் பலர் வருகின்றனர். இவ்வாறு காரியம் செய்ய வருபவர்கள் நீராடிய பின் தாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளை  கழற்றி ஆற்றில் விட்டு விடுகின்றனர். (வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாதாம் !)

இது போன்று பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவதால் பாபநாசம் கோயில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் பழைய துணிகள் தேங்கிக் கிடந்து ஆற்றை மாசுபடுத்தி வருகிறது. அவை அழுகி நாற்றமெடுகிறது, நீரும் கலங்கி கழிவு நீர் போல் ஓடுகிறது. தங்களை சுத்தபடுத்தி கொள்பவர்கள் நதி நாசம் ஆவதை பற்றி கவலை படுவதே இல்லை. ஆடைகளை நதியில் போடகூடாது என்று ஆங்காங்கே தட்டிகளில் எழுதி வைத்தும் மக்கள் போடுவதை நிறுத்தவில்லை.

ஒரு மூன்று மணி நேரத்தில் நாலு லாரிக்கு மேல் கழிவுகள் அள்ளப்பட்டன...கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக ஈடுபட்டது பாராட்டப்படவேண்டிய ஒன்று.

ஒலிபெருக்கி மூலமாக நடைபெறும் பணிகளை குறித்து அறிவித்து கொண்டே இருந்தது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்திருக்கும்.  இருப்பினும் மக்களின் பேச்சுக்கள் " ஆமாம் ஏதோ ஒருநாள் வந்து சுத்தபடுத்துவாங்க அப்புறம் அப்படியே மறந்துடுவாங்க, இவங்களை பத்தி தெரியாதா" என்பதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவரும் இப்பணியில் மக்களின் ஆதரவும் இருக்கவேண்டியது அவசியம்...

வரும் சனிக்கிழமை அன்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சுத்தபடுத்தும் பணி திருநெல்வேலியில் வழக்கம்போல் தொடர இருக்கிறது. 'வாரத்தில் ஓர் நாள்' ஒவ்வொரு சனிக்கிழமையும் நதிக்காக என்பதை முடிவு செய்து அதை விடாமல் செயல்படுத்தி வருபவர்களை மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

ஆம்

சமூக ஆர்வர்கள் மட்டும் நதியை சுத்தபடுத்துவதில் ஈடுபட்டால் போதாது பொது மக்களுக்கும் நதி குறித்த அக்கறை வேண்டும்.

தாமிரபரணியை குப்பைகளில் இருந்து மீட்டெடுப்போம்...ஜீவநதி ஜீவனுடன் ஓடட்டும்...!

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்திருப்பதில் பசுமை விடியல் பெருமிதம் கொள்கிறது. பசுமைவிடியலின் சார்பில் நிர்வாகி கௌசல்யா கலந்து கொண்டார்.


மேலும் படங்கள் முகப்புத்தகத்தில் - தாமிரபரணி சுத்தப்படுத்துதல்

0 comments: