எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Tuesday, May 8, 2012
திருநெல்வேலியை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரி திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த 25-04-2012 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு பசுமை விடியல் சார்பாக தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அவர்களின் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அவர் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினோம், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் நமக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அவர்களையே சரணடைந்தோம். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு பசுமை விடியலுக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார்.

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பசுமை விடியல் Project Head பிரபுவும்,  பசுமை விடியல் நிறுவனர் கௌசல்யா ராஜ் அவர்களும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ் உடனிருந்து பல உதவிகள் செய்தார்.கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்கள் யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8 மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி, காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அவர்களின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் பதிவுலக நண்பர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து உதவி செய்தனர். .(இதை ஏன் விரிவா சொல்றோம் என்றால், பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது .)




திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு நமது நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்...

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள்

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றோம் , 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்த வேளையில் , திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். 




* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டோம். 

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* பதிவர் யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

* மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.


திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. இதில் கௌசல்யா அவர்களுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இவற்றின் முழு படத்தொகுப்பு முகப்புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது. 


திருமண விழா தொகுப்பு - மரக்கன்று வழங்கும் விழா

கல்லூரியில் மரக்கன்று நடும் விழா - படங்கள்

0 comments: