எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Saturday, November 16, 2013
வீட்டுத்தோட்டத்தின் அவசியம் குறித்து பலருக்கும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. ஆனால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்காமல் முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பவர் பலர். எனவே ஆர்வம் இருந்தும் தேவையான ஆலோசனைகள் கிடைக்க பெறாமல் இருப்பவர்களை உற்சாகப் படுத்தி வழிகாட்டி அவர்களையும் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட வைப்பதே பசுமைவிடியலின் நோக்கம்.

பசுமைவிடியல் முகநூல் பக்கத்தில் இதுவரை பகிர்ந்து வந்த வீட்டுத் தோட்டம் டிப்ஸ் இனி இந்த தளத்தில் தொடர்ந்து வெளிவரும் படித்து   பயன்பெறுங்கள் , பலருக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

வீட்டுத் தோட்டம் ஏன் அவசியம் என்பதற்கு  ஒரே ஒரு காரணம் சொன்னா உங்களுக்கு நன்றாகப் புரியும்...காய்கறிகளின் மீது மூட்டை மூட்டையாகக் கொட்டப்படுகிறது இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள். இவற்றால் விஷமாக மாறிய காய்கறிகளை உண்டு வரும் நம் ஆரோக்கியம்  கேள்விக்குறியாகி விட்டது !!? என்ன என்ன பாதிப்புகள் என தொடர்ந்து வாசியுங்கள்

இரசாயன பூச்சிக் கொல்லி தெளிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
-----------------------------------------------------------------------------------------------------------------


உடனடி பாதிப்புகள்
------------------------------

நினைவிழத்தல் , தலைவலி , தலைசுற்றல், சோர்வு, வாந்தி
நாக்கு பிறழ்தல், சீரற்ற நாடித்துடிப்பு , காய்ச்சல், சுவாசபிரச்சனை, சீரற்ற இதயத்துடிப்பு, தோல் அரிப்பு, பருக்கள், வாயுத்தொல்லை,வயிற்றுப் போக்கு

நீண்டகால பாதிப்புகள்
---------------------------------

மூளைப் புற்றுநோய் ,பார்வை இழப்பு ,கண் புரைநோய், நுரையீரல்  பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, ரத்தப் புற்றுநோய், பாலியல் கோளாறு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை. (தகவல் உபயம்-பசுமை விகடன்)
                                                                                                   
எத்தனை விதவித மான நோய்கள் !!!??? மருந்து தெளிப்பவருக்கே இந்த கதி என்றால், பூச்சிக் கொல்லி மருந்தை உறிஞ்சி வளரும் காய்கறிகளை சாப்பிடும் நம் நிலை !!???? நினைக்கவே மிக அச்சமாக இருக்கிறது. வெளித் தோற்றத்தில் நன்றாக தெரியும் நம்முடைய உடலுக்குள் எந்த பாகங்களில் என்ன என்ன பாதிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. லட்சலட்சமாக பொருள் சம்பாதித்தும் நோயுற்ற உடலுடன் வாழ்வது கொடுமை !!

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இயற்கை முறைக்கு நாம் மாறியே ஆகவேண்டும். இயன்றவரை காய்கறிகளை மட்டுமாவது நம் வீட்டிலேயே வளர்த்து சாப்பிட்டு வரலாம்.


ஒரு வேளை உணவுக்காக ஹோட்டலில் சாதாரணமாக சராசரி 500 ரூபாய்  செலவு செய்கிறோம். இந்த அளவு தொகைகூட போதுமானது வீட்டுத்தோட்டம் அமைக்க...இடம்,மண், நேரம் என்ற வெற்று சமாதானம் இனியும் சொல்லாதீர்கள். மனம் இருந்தால் சிறிது இடத்தில் கூட நமக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியும். இதற்கு பல முறைகள் உள்ளன. மண் இல்லா தோட்ட முறையும் தற்போது வந்துவிட்டது . அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் ஒன்றாக இணைந்து தோட்டம் போடா முயற்சிக்கலாம். பால்கனி, கைப்பிடி சுவர், வாசல், முற்றம், மொட்டை மாடி , ஜன்னல் ஓரம் என்று வெயில் படும் இடம்  போதும். டிவி முன்பு செலவு செய்யும் நேரத்தில் காலை மாலை என ஒரு அரைமணி நேரம் ஒதுக்கினால் கூட போதுமானது .

ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம் !!!

காய்கறி வளர்ப்பில் உற்சாகமாக ஈடுபடுங்கள்.....நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் !!!

Happy Gardening !!

By  
பசுமைவிடியல்
Friday, July 13, 2012
தாமிரபரணியை சுத்தபடுத்தும் பணிகள் தீவிரம்
 
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை பலரும் பல கட்டங்களில் மேற்கொண்டும் நதி மாசு படுவது குறைந்தபாடில்லை.  பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக்கழிவுகள்,செப்டிக்டேங்க் கழிவுகள், விவசாய உரம், பூச்சிமருந்து கழிவு, ஆயில் கழிவு,சாக்கடை கழிவுகள், அமலைச் செடிகள், முட்செடிகள் மற்றும் காணாமல் போகும் மணல் போன்றவற்றால் நதி கூவமாகி கொண்டிருக்கிறது. ஆற்று நீரின் அருமையான சுவை மாறிவிட்டது, தவிரவும் குடிக்கவே அச்சப்பட கூடிய நிலையில் இருக்கிறது இதன் அமிலத்தன்மை !!  விளைவு நதியின் அருகில் வசித்தும் கடையில் மினரல் வாட்டர் கேன் வாங்கும் அவல நிலை !?

நதியை பாதுகாப்பதை குறித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தும் ஏனோ இதுவரை அவ்வளவாக கண்டுக்கொள்ளபடாமலேயே இருந்து வந்துள்ளது வேதனை.
இந்நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களை  இணைத்து ஏற்படுத்தப்பட்ட தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் நதியை சுத்தபடுத்த முழு முயற்சி எடுத்து செயலாற்றி வருகிறது.  இந்த இயக்கத்தின் சார்பில் கடந்த நாலு மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆற்றின் கரையோர பகுதி மக்களிடையே நதியை பாதுகாப்பதின் அவசியம்  குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், கூட்டங்களை நடத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

மேலும் இயக்கத்துடன் இணைந்து போலீஸாரும் பணியாற்றுவார்கள் என்று மாநகர கமிஷனர் திரு கருணாகரன் உறுதி அளித்திருந்தார். அதன் படியே   கடந்த சில வாரங்களாக நெல்லையில் பல வியத்தகு செயல்களை செயல்படுத்தியும்  வருகிறார். நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் பகுதியில் ஆற்றை சுத்தபடுத்தும் பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் துவக்கி வைத்ததில் இருந்து இன்று வரை வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டு வருகின்றன. ஆயுதப்படை போலிஸார், ஊர்காவல் படையினர், மாநகராட்சி ஊழியர்கள் , தீயணைப்புப் படை  வீரர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் நடக்கிறது.

கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் வெகு துரிதமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக புதனன்று(11-7-12) அன்று தாமிரபரணி  நதியின் தொடக்க இடமான பாபநாசம் பகுதியில் ஆற்றுக்குள் குப்பைகள், கழிவுகள் அகற்றும்  மாபெரும் பணி ஒன்று நடை பெற்றது. இப்பணியினை திரு இசக்கி சுப்பையா எம் எல் ஏ அவர்களின் தலைமையில் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர்,அம்பை அரிமா சங்கத்தினர், ஊர் காவல் படையினர், திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.



பாவத்தை போக்கும் பாபநாசம் 

பாபநாசத்தில் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களால் போடப்படும் கழிவுகள் தான் நதி எங்கும்  நிறைந்து கிடந்தன...

நவ கைலாயங்களில் முதன்மையான சூரியஸ்தலமான பாபநாசம் பாவங்களை போக்கும் ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் இங்கே  பித்ரு காரியங்கள் செய்யவும், தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யவும் தினந்தோறும் பலர் வருகின்றனர். இவ்வாறு காரியம் செய்ய வருபவர்கள் நீராடிய பின் தாங்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகளை  கழற்றி ஆற்றில் விட்டு விடுகின்றனர். (வீட்டிற்கு எடுத்து செல்ல கூடாதாம் !)

இது போன்று பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவதால் பாபநாசம் கோயில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் பழைய துணிகள் தேங்கிக் கிடந்து ஆற்றை மாசுபடுத்தி வருகிறது. அவை அழுகி நாற்றமெடுகிறது, நீரும் கலங்கி கழிவு நீர் போல் ஓடுகிறது. தங்களை சுத்தபடுத்தி கொள்பவர்கள் நதி நாசம் ஆவதை பற்றி கவலை படுவதே இல்லை. ஆடைகளை நதியில் போடகூடாது என்று ஆங்காங்கே தட்டிகளில் எழுதி வைத்தும் மக்கள் போடுவதை நிறுத்தவில்லை.

ஒரு மூன்று மணி நேரத்தில் நாலு லாரிக்கு மேல் கழிவுகள் அள்ளப்பட்டன...கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக ஈடுபட்டது பாராட்டப்படவேண்டிய ஒன்று.

ஒலிபெருக்கி மூலமாக நடைபெறும் பணிகளை குறித்து அறிவித்து கொண்டே இருந்தது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருந்திருக்கும்.  இருப்பினும் மக்களின் பேச்சுக்கள் " ஆமாம் ஏதோ ஒருநாள் வந்து சுத்தபடுத்துவாங்க அப்புறம் அப்படியே மறந்துடுவாங்க, இவங்களை பத்தி தெரியாதா" என்பதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவரும் இப்பணியில் மக்களின் ஆதரவும் இருக்கவேண்டியது அவசியம்...

வரும் சனிக்கிழமை அன்றும் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சுத்தபடுத்தும் பணி திருநெல்வேலியில் வழக்கம்போல் தொடர இருக்கிறது. 'வாரத்தில் ஓர் நாள்' ஒவ்வொரு சனிக்கிழமையும் நதிக்காக என்பதை முடிவு செய்து அதை விடாமல் செயல்படுத்தி வருபவர்களை மக்கள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும்.

ஆம்

சமூக ஆர்வர்கள் மட்டும் நதியை சுத்தபடுத்துவதில் ஈடுபட்டால் போதாது பொது மக்களுக்கும் நதி குறித்த அக்கறை வேண்டும்.

தாமிரபரணியை குப்பைகளில் இருந்து மீட்டெடுப்போம்...ஜீவநதி ஜீவனுடன் ஓடட்டும்...!

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்திருப்பதில் பசுமை விடியல் பெருமிதம் கொள்கிறது. பசுமைவிடியலின் சார்பில் நிர்வாகி கௌசல்யா கலந்து கொண்டார்.


மேலும் படங்கள் முகப்புத்தகத்தில் - தாமிரபரணி சுத்தப்படுத்துதல்
Tuesday, June 5, 2012



ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப் படுகிறது...இத்தினத்தை பொறுப்பேற்று நடத்துவதற்காக ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் திட்டக் குழு ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒவ்வொரு நாட்டை தேர்ந்தெடுக்கிறது...இந்த ஆண்டு இந்த வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது...

இதற்காக பெருமை கொள்ள முடியாது, எங்கே குறைவு இருக்கிறதோ அங்கே தான் நிறைவு செய்து கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று தான் நாம் எடுத்து கொள்ள வேண்டும்...120 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் அடிப்படை தேவையான கழிப்பறை வசதி இல்லாமல் 60 % மக்கள் இருக்கிறார்கள் என ஆய்வு கூறுகிறது..!!

இத்தகைய மோசமான நிலையில் நாடு இருக்கும்போது வல்லரசு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என கூறும் அதி மேதாவிகளை என்னவென்று சொல்ல ??!


  • தரமற்ற குடிநீர்,
  • சாக்கடையாகும் நீர்பிடிப்பு பகுதிகள்,
  • பிளாஸ்டிக் கழிவால் சீர்கெட்டுப்  போன சுற்றுப்புறம்,
  • மணல் கொள்ளையால் காணாமல் போகும் ஆறுகள்,
  • மரங்களை வெட்டியதால் சுடுகாடாய் மாறிய பசுமை பிரதேசங்கள்

பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும். 

ஆனால்... 

மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் ஆபத்துகள்...

இனியும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வாழும் போதே நரகத்தை அனுபவிப்பதை விட வேறு வழி இல்லை.

மரங்கள்  நடுவது போன்ற கண் துடைப்புகள்

ஒரு வாரத்தில் இத்தனை மரங்களை நட்டோம் என்று லட்சத்தில் கணக்குகளை சொல்கிறார்கள்...இது சாத்தியமா ?!! எந்த ஊரில் , எந்த தெருவில் என்று விவரமாக கூறினால் நல்லது. நடுவதுடன் நிறுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அதை பாராமரிப்பது தான் மிக முக்கியம்...மரம் நடுவது என்பது வியாபாரம் அல்ல !! விளம்பரத்துக்காக மரம் நடுபவர்கள் தாங்கள் நட்ட மரங்களை தொடர்ந்து கண் காணிக்கிறார்களா என தெரியவில்லை. தற்போது வி.ஐ.பி கள் ஒரு கன்றை நடுவதை போன்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதுடன் அவர்களின் சமூக கடமை நிறைவேறி விட்டதாக நிறைவு கொண்டுவிடுகிறார்கள். இப்படி அல்லாமல் முழுமையாக மரம் நடுவதை செயல்படுத்த வேண்டும்...

அரசின்  வீண் ஜம்பங்கள் !!

"வனங்கள்: உங்கள் சேவையில் இயற்கை' என்ற தலைப்பில் உலக சுற்றுச் சூழல் தினத்தை கடைப்பிடிக்க ஐ.நா. சபை கேட்டுக் கொண்டுள்ளது. இதன்படி, பூமியின் சுற்றுச்சூழலைக் காப்பதில் வனங்களின் பங்கு, குறிப்பாக இந்திய வனங்களின் பங்கு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுசெய்யப்படும். - செய்தி 

 எந்த  வித விளம்பரமும் இல்லாமல் 30 வருடங்களாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய மாமனிதரை இன்று நினைவுகூர்வது ஏற்புடையதாக இருக்கும்...இவரை உலகிற்கு அறிமுகபடுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை. அதை செய்ய தவறிய அரசு தான் இப்படி சொல்கிறது......

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பூமியின் சுற்றுச்சூழலை காப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொருளாதார வளர்ச்சி- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் சமநிலையை இந்தியா கடைப்பிடித்து வருகிறது"

இன்னும்  எத்தனை காலத்திற்கு இது போன்ற பச்சை பொய்களை நம் அரசியல்வாதிகள் கூறி கொண்டிருப்பார்கள் ???!! கேவலம் !!

சுற்றுச்சூழலின் எதிரி பிளாஸ்டிக் !!

2009 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது.வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகின்றன. அதனையும் உடனுக்கு உடன் அகற்றி விடுகிறார்கள். ஊரின் நுழைவாயிலிலேயே இங்கே 'பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது' என்ற போர்ட் வைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையாக இது இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒத்துழைப்பை பெற்று சிறப்பாக முழுமையாக செயல்படுத்த பட்டு வருகிறது பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் !!

ஜூன் முதல் தேதியில் இருந்து திருநெல்வேலியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும்,அவ்வளவாக கவனிக்க படவில்லை. ஆனால் தற்போது மேயர் அவர்களின் சிறப்பான அக்கறை, ஆர்வத்தினால் முழுமையாக செயல்படுத்த படும் என்று நம்புகிறோம்...! அரசு மட்டும் திட்டங்களை போடும் ஆனால் அதை கடைபிடிக்க வேண்டியது மக்களின் வேலை. 500 ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் மக்கமுடியாத பிளாஸ்டிக் பொருட்களை வாங்காமல் தவிருங்கள்.

கூவமாகும் தாமிரபரணி போன்ற அனைத்து நதிகளையும் சுத்தபடுத்த கடுமையான தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்...!!

நமது கடமையும் கூட

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு என்பது ஏசி அறைக்குள் மீடியா மைக்குகள் சூழ கோட் போட்ட பெரிய மனிதர்கள் மட்டும் பேசி விவாதிக்கும் விஷயம் அல்ல...
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த ஒரு நல்லதும் நடைபெறாது...இது நமது மண்...நம் பூமி...இதனை காக்கவேண்டியது நம் கடமை...

நம்மால் இயன்றவரை மரங்களை வெட்டாமல், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, நதியில் கழிவுகளை/குப்பைகளை போடாமல், மரங்களை நட்டு வளர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம்...

அடுத்த தலைமுறைக்கு நல்லதை மட்டும் விட்டு செல்வோம்...!!

அனைவருக்கும் பசுமைவிடியல் சார்பில் சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்...!! 
  
Tuesday, May 29, 2012



இப்போது நாம எல்லோரும் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டது, எதிலும் சுகாதார கேடு, சுவாசிக்கும் காற்றிலும் சுத்தம் இல்லை என்று புலம்புறோம் ஆனால் இன்னும் சரியான விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சமீப காலமாகத்தான் 'மரங்களை வளர்க்கணும்', 'மரங்களை வெட்டகூடாது' என்ற கோஷங்கள் வலுப்பெற தொடங்கி உள்ளன. மரங்களை வெட்டகூடாது என்பது சம்பந்தமான ஒரு ஆச்சரியமான வரலாறு ஒன்று நம்ம நாட்டில் இருக்கிறது. நமக்கு முந்தைய காலகட்டத்திலேயே இதற்காக ஒரு பெரிய உயிர் போராட்டம் நடந்திருக்கிறது...!!

சுற்றுசூழல் மாசுக்கு எதிராக முதல் முறையாக ஒரு போராட்டம் நடைபெற்றது நம் இந்தியத் திருநாட்டில்தான் ! 
பல ஆச்சரியங்களுக்கும், அதிசயங்களுக்கும் ஆரம்பம் நம் நாடாகத்தான் இருக்கும்...?!!

கி.பி. 1730  ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய்சிங் தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க நினைத்தார். ஆனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் இவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அந்த மரங்களை வெட்ட தனது ஆட்களை அனுப்பினார்.

அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். பதறிப்போன மக்களும் வேறு வழியின்றி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மரத்தையும் கட்டிப் பிடித்துக் கொண்டனர். அதில் பெரும் பாலானவர்கள் பெண்கள் ! 

வீரர்களும் மன்னரின் உத்தரவை மீற முடியாமல் மரத்தை கட்டிபிடித்தவர்களை முதலில் வெட்டிப் போட்டுவிட்டு பின் மரத்தை வெட்டினார்கள். மூணு பெண் குழந்தைகளுக்கு தாயான 'அம்ரிதா தேவி' என்ற பெண் தனது குழந்தைகளுடன் முதலில் உயிரை விட்டார். இப்படியே 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டிய பின்னரே மன்னரின் மனம்  இளகியது.....?!! 'போதும் நிறுத்துங்கள் இந்த இடம் வேண்டாம்' என்று போர்வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார். மரங்களுக்காக தங்களின்  உயிரை விட்ட அம்மக்களின் தியாகம் எவ்வளவு பெரிது ?!! 

இந்த தியாகத்தின் ஆழம் இன்றைய மக்களுக்கு புரியவில்லை...இதனை நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டும். மரங்களை வளர்க்க சொல்லி ஊக்கபடுத்த வேண்டும். 

இந்த மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு என்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த நிகழ்வை 'சிப்கோ இயக்கம்' என்று கொண்டாடுகிறார்கள். 'சிப்கோ' என்றால் தழுவுதல் என்று அர்த்தம். 'கொண்டாடுகிறோம்' என்று சொல்ல இயலவில்லை !? ஏன்னா பலருக்கும்  இந்த இயக்கம் பற்றியே தெரியாது என்பதே உண்மை.  

இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர் திரு சுந்தர்லால் பகுகுணா என்பவர் ஆவார். காடுகளை அழிப்பவர்களுக்கு எதிராக இப்படி ஒரு இயக்கம் இருப்பதால் தான் மரங்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றன....!!


1981-ம் ஆண்டு இந்திய அரசு, சுந்தர்லால்  பகுகுணா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்க வந்ததை வாங்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், ''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்றுதான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும் !'' என்றாராம். 


(தற்போது வரை அந்த தகுதியை அவர் அடையவில்லை என்பது சந்தோஷபடகூடிய செய்தி அல்ல !!?)

"மரங்கள் மனிதனின் தயவு  இல்லாமல் கூட வளர்ந்துவிடும்,
 மனிதனால்  மரங்கள் இன்றி வாழ இயலாது என்பது நிதர்சனம் "

நறுமணம் 
என்னில் எதற்கு... 
வெட்டுகிறார்களே 
கதறுகிறது 
சந்தன மரம் !?


"இந்த பிரபஞ்சம் ஒரு மகாசக்தியின் படைப்பு. இப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும், அவற்றின் நலனுக்காகவே இயற்கை என்னும் மகாசக்தி படைத்துள்ளது, எந்த  உயிரினமும் அடுத்த உயிரின் உரிமைகளை பறிப்பது பெரும்பாவம்"  
                                                                                                         - ஈசோபநிஷதம்.

மரங்களை வெட்டுவதை தடுப்போம்...மனிதம் காப்போம். !!!


                                                             * * * * *



Source : ' மனதோடு மட்டும்...!'


Tuesday, May 15, 2012
நாவல் பழம் பற்றி நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும். தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை போன்ற மாதங்களில் இது கிடைக்கிறது. நிறைய மருத்துவ குணங்களை இது கொண்டுள்ளது. இதனைப் பற்றி விரிவாக காண்போம். 




1. மூலிகையின் பெயர் -: நாவல்.

2. தாவரப் பெயர் -: EUGENIA JAMBOLANA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: MYRTACEAE.

4. வேறு பெயர்கள் -: நாகை, நம்பு, சம்பு, சாதவம், ஆருகதம், நேரேடு, நவ்வல், நேரேடம், சாட்டுவலம், சாம்பல், சுரபிபத்திரை முதலியன.

5. வகைகள் -: வெள்ளை நாவல், கருநாவல், கொடிநாவல், குழிநாவல், மற்றும் சம்பு நாவல்.

6. பயன்தரும் பாகங்கள் -: இலை, பட்டை, பழம் மற்றும் வேர் முதலியன.

7. வளரியல்பு -: நாவல் ஒரு பெரிய மரவகையைச் சேர்ந்தது.  இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் வளரும். சிறப்பாக ஆற்றோரப் படிகைகளில் மற்றும் கடற்கறையோரங்களில் நன்கு வளரும். பம்பாய் மாநிலத்தில் எங்கும் உள்ளது. ஈரமான தென் கர்நாடகா, ராயல் சீமைப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. மரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இலைகள் ஒரே மாதிரி இருக்காது. மாறுபட்டு இருக்கும். இலை நுனி கூர்மையானது. அரசு இலை போல் இருக்கும். இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மையடன் இருக்கும். ஒளி ஊடுருவிச் செல்கின்ற புள்ளிகள் நிறைந்தவை. நகப்பழம் உருண்டையாகத் தோன்றும். பரிமானங்கள் ஒரே மாதிரி இருக்காது. கனியின் நிறம் கரு நீலம். மிகுந்த சாற்றுடன் இருக்கும். உண்ணக்கூடிய பழம். சிறிது துவர்ப்பாக இருக்கும்.

 100 கிராம் பழங்களில் உள்ள உணவுச் சத்துக்களின் விவரம் -: மாவுச் சத்து 19.7 கி., புரதச்சத்து 0.7 கி., கொழுப்பு 0.1 கி., கால்ஷியம் 20 மி.கி., பாஸ்பரஸ் 10 மி.கி., இரும்பு 1 மி.கி., ஆகியவை. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -; தளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப்படுத்தும். இதன் துவர்ப்பு குருதியை உன்டாக்கும். கட்டாக வைக்கும். குருதிக் கசிவை நீக்கும். தாதுக்களை உரமாக்கும். பழம் குளிர்ச்சி தரும். சிறுநீரைப் பெருக்கும். கொட்டை நீரிழிவைப் போக்கும். தீட்டு-விலக்கு தள்ளிப் போகும், விந்து கட்டும்.

நாவல் கொழுந்துச்சாறு ஒரு தேக்கரண்டி, 2 ஏலரிசி, லவங்கப்பட்டைத்தூள் மிளகளவு சேர்த்துக் காலை, மாலை கொடுக்க செரியாமை, பேதி, சூட்டு பேதி தீரும்.

இலை, கொழுந்து, மாங்கொழுந்து சமன் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலக்கிக் கொடுக்கச் சீதபேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்தபேதி ஆகியவை தீரும்.

விதையைத் தூள் செய்து 2 முதல் 4 கிராம் அளவு தினமும் உட்கொள்ள, நாளடைவில் நீரிழிவு நோயில் அதி சர்கரை அளவு குறைந்து வரும். சில பாஷாண மருந்துகள் செய்யவும் இதன் உறுப்புகள் பயன்படுகின்றன.

நாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீருடன் காலை, மாலை கொடுக்க மதுமேகம், அதிமூத்திரம் தீரும்.

நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும்.

இப்பட்டையை அரைத்து அடிபட்ட காயம், வீக்கம் முதலியவற்றின் மேல் போட, அவை குறையும்.

நாவல் பட்டைச்சாறு எட்டி நஞ்சுக்கு மாற்று மருந்து, கொழுந்து சிவனார் வேம்பு கிழங்கின் நஞ்சை முறிக்கும். கழிச்சலைப் போக்கும்.

நாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சம அளவு உலர்துதிய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி என்ற வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம் குணமாகும். நீரிழிவும் குணமாகும்.

மா நாவல் மரப்பட்டையைச் சம அளவில் மண் சட்டியில் போட்டுக் காய்ச்சிய கசாயத்தை 30 மி.லி. அளவு காலை, மாலை சாப்பிட்டாலும் சீதபேதி, ஆசன எரிச்சில் குணமாகும். பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும்.

காப்பி, டீ அதிக அளவில் குடித்தால் அடிக்கடி பித்த வாந்தி வரும். இதற்கு நாவல்பட்டைக் கசாயம் கற்கண்டு சேர்த்து

3-6 வேளை 10-20 மி.லி அருந்த வாந்தி நிற்கும். செரிமானம் நன்கு நடைபெரும்.

நாவல்பட்டை கசாயம் 5-6 நாள் 30 மி.லி. குடிக்க ஆறாத புண் ஆறும். புண்ணையும் இதனால் கழுவலாம். நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.

நாவல் தளிரை அரைத்து சிறு குழந்தைகளுக்கு மேலே பூசி குளிப்பாட்ட கிரகதோசம்-வெப்பத்தாக்குதல் குணமாகும். மிளகு சேர்த்து அரைத்துக் கொடுக்க மலங்கட்டும்.

நாவல் பழத்தைத் தனியாகவே சாப்பிடலாம். இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். இதயத் தசைகள் உறுதிப்படும். குருதி ஊறும். குருதி கெட்டிப்படும். ஆசன எரிச்சில் தீரும். மலக்கட்டு ஏற்படும். அதிக அளவில் சாப்பிட்டால் ஜலதோசம், சன்னி வரும். தொண்டைக் கட்டி-டான்சில் வளரும். வீங்கும். பேச முடியாமல் தொண்டை கட்டிக் கொள்ளும்.

நாவல் பழத்திலும் சர்பத் செய்யலாம். பழரசம் அரை லிட்டர் கற்கண்டு 300 கிராம் கலந்து, குங்குமப்பூ 2 கிராம், பச்சைக் கறுபூரம் ஒரு கிராம், ஏலம் ஒரு கிராம், பன்னீர் 50 மி.லி. கலந்து காய்ச்சி பதமாக வடித்து வைத்து உபயோகிக்கலாம்.

Tuesday, May 8, 2012
திருநெல்வேலியை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரி திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த 25-04-2012 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு பசுமை விடியல் சார்பாக தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம்.

'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அவர்களின் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அவர் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.



மரகன்றுகளை வாங்க பலரை அணுகினோம், முக்கியமாக நமது அரசின் வனத்துறை ! ஆனால் அவர்கள் கூறிய சட்ட திட்டங்கள் நமக்கு மரகன்றுகள் இலவசமாக கிடைப்பதற்கு தடையாக இருந்தது. பலவாறு வேண்டியும் ஏமாற்றமே மிஞ்சியது. அதற்கு அவர்கள் கூறிய காரணங்கள்: "கன்றுகளை பெறுபவர்கள் முறையாக பராமரிக்கிறார்களா என நன்கு தெரிய கூடிய நிலையில் தான் அரசு இலவசமாக கொடுக்கும், இப்படி தனித் தனியாக கொடுத்தால் நாங்கள் எவ்வாறு கணக்கு எடுக்க முடியும், ஆயிரம் பேரின் முகவரியும் கொடுக்க முடியுமா?" என கேட்டனர்.

இதில் இப்படி ஒரு சிக்கலா என மிக வருத்தத்துடன் நாட்கள் செல்ல இறுதியாக உதவி செய்ய கேட்டு சங்கரலிங்கம் அவர்களையே சரணடைந்தோம். பரபரப்பான திருமண வேலைக்கு மத்தியிலும் அவரது நண்பர் திரு.முத்துக்குமார் அவர்களிடம் தொடர்பு கொண்டு பசுமை விடியலுக்கு தேவையானவற்றை செய்யச் சொன்னார்.

அவரின் உதவியால் குற்றாலத்தில் இருந்து குறைந்த விலைக்கு மரக் கன்றுகள் கிடைத்தன.

திருமணத்தன்று...

பெங்களூரில் இருந்து வந்திருந்த பசுமை விடியல் Project Head பிரபுவும்,  பசுமை விடியல் நிறுவனர் கௌசல்யா ராஜ் அவர்களும் கன்றுகள் வழங்க வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர். நெல்லையை சேர்ந்த சகோதரன் சிராஜ் உடனிருந்து பல உதவிகள் செய்தார்.கன்றுகளுடன் பையினுள் சிறு குறிப்பு எழுதப்பட்ட துண்டு பிரசுரம் வைக்கும் யோசனையை எங்களிடம் கூறியது எறும்பு ராஜகோபால் தான். முன் தினம் இரவில் எல்லோருமாக அமர்ந்து பேசிகொண்டிருந்த போது "உங்களின் நோக்கம் என்ன ? நீங்கள் யார் ? என்பதை பற்றிய சிறு விளக்க குறிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார். நல்ல யோசனையாக இருந்தது ஆனால் அவர் சொல்லும் போது நேரம் 8 மணி, பின் வேகவேகமாக எழுதி பிரபு + சிராஜ் இருவரிடம் கொடுத்து பிரிண்ட் பண்ண கொட்டும் மழையில் அனுப்பி, காலையில் வந்து சேர்ந்தது கட் செய்யபடாமல்...கட் பண்ண கத்தி தேட, சிசர் தேட என கொஞ்ச நேரம் அல்லாடி, சங்கரலிங்கம் அவர்களின் நண்பர் வந்தார் உதவிக்கு...!! மக்கள் வர தொடங்கவும் பதிவுலக நண்பர்கள் வந்தார்கள் உதவிக்கு, ஆளுக்கு ஒரு கன்றை எடுத்து பையில் வைத்து உதவி செய்தனர். .(இதை ஏன் விரிவா சொல்றோம் என்றால், பலரின் ஒத்துழைப்பால் மட்டுமே இந்த சேவை சாத்தியப்பட்டது .)




திருமணம் நடைபெறும் ஹாலில் திரு. சிதம்பர பாண்டியன் சார் மரகன்றுகள் விநியோகிக்க இருப்பதை பற்றியும், வீட்டில் வைக்க இடவசதி இருப்பவர்கள் மட்டும் இந்த இளந்தளிர்களை பெற்று செல்ல வேண்டுமாறு அறிவித்தார்.அவருக்கு நமது நன்றிகள்.

அங்கே நடந்தவற்றில்...

மனம் கவர்ந்த சில சந்தோஷத் துளிகள்

* மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் லைபிரேரியன் திருமதி.திருமகள் விழிகள் விரிய ஆர்வமாக பசுமை விடியல் பற்றிய அனைத்தையும் கேட்டறிந்தார்.தனக்கும் சுற்றுச்சூழல் குறித்தான விசயங்களில் ஆர்வம் இருப்பதாகவும், இனி பசுமைவிடியல் மேற்கொள்ள போகும் அத்தனை சேவையிலும் அவரை அழைக்க வேண்டுமென செல்பேசி எண்ணை கொடுத்தார். "உங்கள் கல்லூரியில் மரம் நடுவதை நாங்கள் செய்ய ஆர்வமாக இருக்கிறோம், அனுமதி கிடைக்குமா?' என்றோம் , 'நேரில் வாருங்கள், முயற்சி செய்வோம்' என்றார். நமக்கு இது போதாதா, அடுத்த வாரம் போய்ட வேண்டியதுதான்.

* திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திருமதி. விஜிலா சத்யானந்த் அவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு மாடியில் இருந்து கீழிறங்கி எங்களை கடக்க முயன்றவர் திரும்பி, 'என்னது இங்க பச்சை பச்சையா இருக்கு' என சிரித்து கொண்டே பார்த்தார், உடனே 'மேடம் ஈஸ்ட் டிரஸ்ட் ஞாபகம் இருக்கா?' என்றதும் (போலியோ முகாமில் எங்கள் நிறுவனம் கலந்து கொண்டு பணியாற்றியது, அப்போது பேசி இருக்கிறோம்) அவரும் அருகில் வந்து 'ஓ! நீங்களா' என்று ஆச்சர்யபட்டு துணிப்பையை எடுத்து பார்த்து வெகுவாக பாராட்டினார்...'உங்களின் இந்த முயற்சி நன்றாக இருக்கிறது' என்றவர் தனக்கும் ஒரு மரக்கன்றை வேண்டும்' என வாங்கி கொண்டார்...உடன் வந்த மாநகராட்சி அதிகாரிகளையும் 'ஆளுக்கு ஒண்ணா வாங்கிகோங்க' என வாங்க வைத்து சந்தோசமாக கிளம்பினார்.



* மாநகராட்சி ஆணையாளர் திரு. மோகன் அவர்கள் விசாரித்து மகிழ்வுடன் மரக்கன்றை பிரபுவிடம் இருந்து பெற்று கொண்டார்.



* ஒரு பாட்டி பிரபுவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார், இப்படி கேட்கிறாரே இவர் எங்க வாங்க போறார் என நினைத்த வேளையில் , திரும்பி பார்த்தா அவரை சுற்றி நிறைய பேர், அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு கன்றாக கொடுக்க சொல்லி அசத்திட்டார். 




* நாகர்கோவிலை சேர்ந்த திரு.கதிரேசன் என்பவர் "விரைவில் தனது வீட்டில் ஒரு திருமணம் நடைபெற இருக்கிறது,அங்கேயும் இதுபோல் மரக்கன்றுகளை வழங்கவேண்டும் என விரும்புகிறேன்,ஏற்பாடு செய்து தருவீர்களா" என்றார். பரஸ்பரம் செல்பேசி எண்களை பரிமாறிகொண்டோம். 

* மாலை நடந்த ரிசப்ஷனிலும் தொடர்ந்து கன்றுகளை வழங்கினோம்...அப்போது வந்திருந்த பதிவர் நண்பர் துபாய்ராஜா மிக ஆர்வமாக 15 கன்றுகளை வாங்கிகொண்டார். (மறுநாள் காலையில் போன் செய்து கன்றுகளை நட்டுவிட்டேன் என மகிழ்வுடன் கூறினார்) இரு மாதங்கழித்து கன்றுகளின் வளர்ச்சியை போட்டோ எடுத்து அனுப்பு வதாகவும் கூறினார். அவரது ஆர்வத்திற்கு என் நன்றிகள்.

* பதிவர் யானைக்குட்டி ஞானேந்திரன் தான் வாங்கி சென்ற கன்றுக்கு 'பவி' என பெயரிட்டு நட்டதாக மகிழ்வுடன் தெரிவித்தார்.

* மாலை வந்த பசுமை விடியலின் உறுப்பினர் பதிவர் கூடல் பாலா அவர்கள் , திருமண வரவேற்பு முடியும் வரை கூட இருந்து மரக்கன்றுகளை வழங்கினார்.

எந்த ஒரு செயலும் பலரால் அங்கீகரிக்க பட்டால் அதன் மகிழ்ச்சியே தனிதான்...அத்தகையதொரு மனநிலையில் நாங்கள் இருக்கிறோம்.


திங்கள் அன்று (30/4/2012) திருநெல்வேலியில் இருக்கும் 'ஸ்ரீ ரமணா பாலிடெக்னிக் கல்லூரி' யில் பசுமைவிடியல் சார்பில் 160 மரகன்றுகள் வழங்கப்பட்டது. இதில் கௌசல்யா அவர்களுடன் பெங்களூரில் இருந்து வந்திருந்த Miss.சில்வியா (Project Executive,Pasumai Vidiyal) மற்றும் அவரின் பெற்றோர் சகிதம் சென்றோம். நல்லமுறையில் கல்லூரியின் நிறுவனர் எங்களை மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார், அங்கிருக்கும் ஊழியர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.



இவற்றின் முழு படத்தொகுப்பு முகப்புத்தகத்தில் பகிரப்பட்டுள்ளது. 


திருமண விழா தொகுப்பு - மரக்கன்று வழங்கும் விழா

கல்லூரியில் மரக்கன்று நடும் விழா - படங்கள்
Monday, May 7, 2012
வெண்நுணா அல்லது நோனி அல்லது இந்தியன் மல்பெரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மூலிகைத் தாவரமாகும்.





தாவரவியல் பெயர் : Morinda Citrifolia
தமிழ் பெயர் : வெண்நுணா,
மற்ற பெயர்கள் : இந்தியன் மல்பெரி



மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருதால் சில எளிய மருத்துவ முறைகளும், சில தாவரங்களும் தற்சமயம் பிரபலமாகி வருகின்றது. அந்த வரிசையில் இந்த வெண்நுணா என்னும் நோனி முக்கியத்துவம் பெறுகிறது. மிக நீண்ட நோய் பட்டியலை வெளியிட்டு குணம் கிடைக்கிறது என்று விளம்பரம் செய்கிறார்கள். உண்மையும் உண்டு. இது மருந்தல்ல சத்துள்ள பானம். ஹவாய் மற்றும் தகத்தி தீவு போன்ற பகுதிகளின் நோனி பழச்சாறு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் இப்பழச் சாறு கிடைக்கிறது. 4 இலக்கத்தில் விலை உள்ளது. பொதுவாக கடற்கரை பகுதிகளில்தான் வரும் என்று நம்பப்பட்ட இம்மரம் உள்நாடுகளிலும் நன்கு வளர்கிறது. சற்று துர்வாசம் தரும் இப்பழத்தை சாறு எடுப்பதற்கு பதிலாக இலையை கீரையாக உட்கொண்டாலும் பலன் உண்டு என கூறுகிறார்கள்



பரவலாக தமிழகத்தில் காணப்படும் “மஞ்சநத்தி” என்று அழைக்கப்படும் Morinda Tinctoria வும் இக்குடும்பத்தைச் சார்ந்ததே ஆனால் பல்வேறு நாடுகளில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதிக மருத்துவ குணம் உடையது என வெண்நுணாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் கடலோரங்கள், எரிமலைத் திட்டுகள், சுண்ணாம்பு பாறைகள் போன்ற கடல்சார்ந்த இடங்களில் நன்கு வளர்கிறது. பசிபிக் தீவு நாடுகளில் மக்கள் இதனை உணவாகவும் உண்கிறார்கள். புற்று நோய்க்கு பெருமருந்தாகவும் பயன்படுகிறது

 “உணவே மருந்து மருந்தே உணவு” என்ற கொள்கையில் நாம் வெண்நுணாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றி - மரவளம்
Friday, April 27, 2012
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுத் துறை வழங்கி இருக்கும் ஆவணப்படம் தான் "நல்லதை செய்வோம்". நாம் எப்படி எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரம்பிக்கும் இந்தப் படம் நம் முன் மிகப் பெரிய கேள்வியை வைக்கிறது.

எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்? 

நீங்கள் அப்பா/அம்மா என்றால் உங்கள் பிள்ளைகளுக்கு தராமல் நீங்களே உணவே உண்டு தீர்ப்பீர்களா? இதைத் தான் நாம் இப்போது செய்கிறோம். எல்லாவகையான ஆற்றல்களும் தீர்ந்து கொண்டிருக்கும் இந்த நாளில், வருங்கால தலைமுறை பூமியில் எப்படி வாழ முடியும்? அமில மழை, சுத்தமற்ற காற்று, நீரே இல்லாத ஆறு/கடல், உணவை விளைவிக்காத பூமி. இது தான் நாம் நம் குழந்தைகளுக்கு தரப்போகும் பரிசா?


இந்தப் படத்தில் மிக முக்கியமாக கூறப்படும் விஷயம், எரிசக்தி பயன்பாடு குறித்து, நம் நாட்டில் இப்போது 80%  மின்சாரம்  அணு, அனல், நீர் மூலம் பெறப்படுகிறது. இதில் முதல் இரண்டும் மிக ஆபத்தானவை என்று தெரிந்தும் நாம் இன்னும் அவற்றையே நாடி இருக்கிறோம். 

அனல் மின் பற்றி அதிக தீமையை சொல்லும் படம், அணு மின் நிலையத்தை குறித்து வாய் திறக்கவில்லை. ஆனால் அதன் தீமைகள் நாம் அறிந்ததே, செர்நோபில், புகுஷிமா போன்றவை இவற்றுக்கு சாட்சி. நேரடி விளைவுகளை தாண்டி, பக்க விளைவுகள் கூட மிக அதிகம். புற்றுநோய், தோல்நோய், பூமி மாசுபடுதல், என நிறைய பிரச்சினைகள் உள்ளன. இவை இரண்டும் புதுப்பிக்க முடியாதவை. அதிக தீமைகளையும் கொண்டவை. 

அடுத்து நீர்மின் உற்பத்தி, தீமை எதுவும் இல்லாவிட்டாலும் நம்மால் இதில் இருந்து அதிக மின்சாரம் பெற இயலாது. இதற்கான மாற்று வழி தான் என்ன? என்ன? என்ன? 

இயற்கை தரும் அறிய வசதிதான் "சூரிய ஒளியில் இருந்து மின்சாரம்"

இதோடு காற்றாலை உற்பத்தியும் இதில் அடக்கம். இவை மரபு சாரா எரிசக்தி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நாம் பசுமை ஆற்றல் என்றே அழைக்கலாம்.



முதலில் சூரிய ஒளி, பூமி முழுவதும், ஒரு மணி நேரம் விழும் சூரிய ஒளியை வைத்து நாம் இந்த முழு பூமிக்கு ஒரு வருடத்துக்கு தேவையான மின்சாரத்தைப் பெற முடியும். ஆச்சர்யமாக இருக்கிறதா? சூரியன் தன்னுள் இன்னும் நிறைய ஆச்சர்யங்களை கொண்டுள்ளது. 

நாள் முழுவதும் வரும் ஒளி மூலம் நாம் நம் தேவைக்கு அதிகமான மின்சாரத்தை பெற முடியும்.  இதில் மிக முக்கியமான விஷயம், நாம் சேகரிக்கும் மின்சாரத்தை நாம் சேகரித்து வைக்க வேண்டும்.

காற்றலை மிக சில பக்க விளைவுகளை கொண்டுள்ள போதும், சுற்றுப்புற சூழல்க்கு ஆபத்தாக எதையும் செய்வதில்லை. 

சரி இதெல்லாம் தான் இருக்கே, இப்போ நாம் என்ன செய்ய வேண்டும்? 

நம் விஞ்ஞானிகளுக்கு நாம் வைக்க வேண்டிய ஒரே கோரிக்கை, மிகக் குறைந்த ஆற்றல் மூலம் இயங்கும் மின் சாதனங்களை கண்டு பிடிக்க வேண்டும். மிக அதிக மின்சாரம் தேவைப்படும் தொழிற்சாலைகளில் அவர்கள் கவனம் செலுத்தி இதற்கொரு தீர்வை காண வேண்டும். 

கால் நூற்றாண்டுக்கு முன்பு ஒரு அறை முழுவதையும் அடைத்த கணினி இன்று நம் சட்டைப் பையில் வைக்கும் அளவுக்கு சிறிதாகி விட்டது. இது தான் மனிதனின் திறமைக்கு மிகப் பெரிய எடுத்துக் காட்டு. 

 இதை நாம் இப்போதே ஆரம்பித்தால் நம் வருங்காலம் நம்மை போற்றும்.

ஒரு புதிய விடியலை நம் வருங்காலத்துக்கு தருவோம். அது பசுமை விடியல் ஆக இருக்கட்டும். 



Tuesday, April 17, 2012
நம் அனைவருக்கும் செடி, மரம் சூழ்ந்த ஒரு இடத்தை / வீட்டை பார்த்தா ஒரு சந்தோசம் வரும்...நம்ம வீட்லையும் இந்த மாதிரி பசுமையா இருந்தா எப்படி இருக்கும் என்று ஆசை படும் பலரது வீடுகளில் மரங்கள் இருப்பதில்லை...காலி இடங்கள் இருந்தும் மரங்களை நடுவதற்கு அதிகம் யோசிப்பார்கள்...

ஒரு காரணம் என்னவென்றால் சரியாக தண்ணீர் விட்டு பராமரிக்க முடியாது என்பதுதான்..அதுவும் இந்த கோடை காலத்தில் ரொம்பவே சிரமப்படணும்...விருப்பப் பட்டு அதிக மரங்கன்றுகளை நட்டுவிட்டு ஒவ்வொன்றுக்கும் தண்ணீர் விட இயலாமல் அது வாடி போவதை வேதனையோடு பார்க்கவேண்டியதாக இருக்கும்.

மரங்களை வளருங்கள் என்று பல தொண்டு நிறுவனங்கள் மரக்கன்றுகளை பல இடங்களிலும் வைத்து வருகிறது...வைப்பது மட்டும் முக்கியம் இல்லை. அதை தொடர்ந்து பராமரிக்கவேண்டும், அப்போதுதான் அச்சேவை முழுமை பெறும். இதற்க்கு எல்லாம் தீர்வு சொல்வது போல திரு வின்சென்ட் சார் ஒரு ஆலோசனை கூறினார். அதனை பசுமைவிடியல் வாசகர்களுக்காக இங்கே விளக்குகிறார்...என்னவென்று தான் படித்து பாருங்களேன்...விரைவில் உங்கள் வீடும், தெருவும்,ஊரும் பசுமையால் குலுங்க தொடங்கலாம்...வாழ்த்துகள்...

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும்




இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி



அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும்.






கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது.




நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும்.




நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும்.





நன்றி - மரவளம்
திரு.வின்சென்ட் சார்.

பசுமை விடியல் தளத்தில் இனி தொடர்ந்து மரங்களின் முக்கியத்துவம் குறித்தும், நடவேண்டிய நல்ல மரங்கள் எவை எனவும், வீட்டு தோட்டம், மொட்டை மாடி தோட்டம் போன்றவற்றை குறித்தும் பகிர இருக்கிறோம்...


பூமி எங்கும் பசுமையால் நிறையட்டும்...!






Wednesday, March 28, 2012
இயற்கையை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வரும் பசுமைவிடியல் இயக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இயக்கத்தில் ஒருவராக இணைந்து செயலாற்றி கொண்டு வருகிறது. ஆற்றின் கரையோர கிராம மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவ்வியக்கம் அடுத்த மாதம் குறிப்பிட்ட பகுதியை சுத்தபடுத்த நேரடியாக களத்தில் இறங்க இருக்கிறது.

மேலும் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதை முக்கியமாக எண்ணி செயல்பட்டு கொண்டு வரும் சமயத்தில் சில வருந்தகூடிய சம்பவங்களை கேள்வியுற நேர்ந்தது. 

மணல் கொள்ளை 

மணல் அள்ளும் சமூக விரோதிகளால் அப்பாவி மனித உயிர்கள் பலியாவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு ஐந்து வருடத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தும் திருட்டுத்தனமாக கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது...இதை தடுக்கும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் தாக்கபடுகிறார்கள்...அதிலும் சமீபத்தில் திருநெல்வேலியை அடுத்த திசையன்விளை அருகேயுள்ள மிட்டாதார் குளத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற இளைஞர் மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு விட்டார்.




அந்த ஊர்காரர்கள் இணைந்து ஒரு காவல் குழுவை அமைத்து மணல் கொள்ளை நடப்பதை கண்காணித்து வந்துள்ளனர். சம்பவத்தன்றும் அவ்வாறு இரவில் காவலுக்கு சென்ற சதிஷ்குமாருடன் சேர்ந்து சிலரும் மணல் லாரியை தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். லாரியை மேலும் செல்ல விடாமல் தடுத்து நின்ற சதிஷ்குமாரின் மீது சற்றும் எதிர்பாராத நேரத்தில் லாரியை ஏற்றி கொன்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டனர். 

அவரது தந்தை வின்சென்ட் மகனுடன் சேர்ந்து சென்றிருக்கிறார், அவரது கண்முன்னால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத அவர், " எனது குடும்பமே அவனை நம்பி தான் இருந்தது...இப்போது அவனை இழந்து நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம் இருந்தாலும் இதுக்கு பிறகாவது இந்த ஊரில் மணல் கொள்ளை நடக்காமல் அரசு பார்த்து கொண்டால் போதும். இயற்கையை பாதுக்காக்க தன் உயிரை கொடுத்த என் மகனின் ஆசை அப்போதுதான் நிறைவேறும் " என உருக்கமாக வேண்டிகோள் விடுத்திருக்கிறார்.  (நன்றி - பத்திரிக்கை செய்திகள் )

இயற்கையை காப்பதற்காக தன் உயிரை கொடுத்த சதீஷ் குமாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறோம். 


சதிஷ்குமார் ஒருவரின் வருமானத்தை நம்பி உடன் பிறந்த 4 தம்பியர், ஒரு தங்கை மற்றும் பெற்றோரும் இருந்திருக்கின்றனர். அரசாங்கத்தின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பத்துக்கு உதவுவது சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கடமை என உணருகிறோம்.

கரம் கோர்க்கிறோம்

பணம் இத்தகைய உயிர் இழப்பிற்கு ஈடு ஆகாது எனினும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு சிறு உதவியாக இருக்கும், தவிர மகனை இழந்தாலும் நம்மை போன்றோரின் ஆறுதல் அவர்களுக்கு வாழ்க்கையின் மீது இன்னும் அதிக பிடிப்பை கொடுக்கும். நாட்டிற்காக பாடுபடும் நல்ல உள்ளங்கள் சோர்ந்துவிட கூடாது, அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க இது போன்ற செயல்கள் உதவ கூடும்.

ஆதலால், 

இயன்றளவு பொருளை திரட்டி சதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளது பசுமைவிடியல் இயக்கம். 

திரட்டப்படும் தொகை சதிஷ்குமாரின் உடன்பிறந்தவர்களின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அவர்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துவிடவேண்டும் எனவும் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்பதை ஒரு செய்தியாக இங்கே பகிர்கின்றோம்.

இது சம்பந்தமான உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும்,   Admin@pasumaividiyal.org  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உதவி செய்ய விரும்பும் நண்பர்களும் இதே முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். 

Monday, March 26, 2012


தாமிரபரணி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் முக்கூடல் ஆற்றங்கரை முத்துமாலையம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு துணைத்தலைவி விஜயா தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கவுசல்யா முன்னிலை வகித்தார். செயலாளர் அய்கோ வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் லட்சுமணன், துணைத்தலைவர் ஜெரால்டு, ஆட்டோ சங்க தலைவர் சேட், செயலாளர் போஸ்கோ, குகன்ராஜ், விவசாய கூடமைப்பு செய லாளர் தேவசகாயம், நெல்லை மாவட்ட பழைய இரும்பு, பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், தென் பொதிகை பரணி அறக்கட்டளை நிறுவனர் கமால், ஜெரின், பொன்பசுங்கிளி உட்பட பலர் பேசினர்.



மணல் தோண்டிய மரண பள்ளங்களில் விழுந்து குளிக்க வருவோர் உயிரிழக்காமல் இருக்கவும், ஆற்றில் வாகனங்களை கழுவாமல் இருக்கவும் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும். ஆற்றில் மாட்டு வண்டிகளில் அள்ளப்பட்டு பின் மினி லாரிகளுக்கு மாற்றப்படும் மணல் அதிரடியாக கடத்தப்படுகிறது. இதை வருவாய் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், இங்குள்ள ஆலைகளுக்கு அளவுக்கதிகமான தண்ணீர் விதிமுறைகளை மீறி குளங்களை உடைத்து எடுத்துச்செல்லப்படுகிறது. ஆலைக்கான தண்ணீர் அளவை தெரிவிப்பதுடன் மீட்டர் மூலம் அளந்து வழங்க பொதுப்பணித்துறையும் குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாட்டை நெல்லை பல் நோக்கு சமூக சேவா சங்க பணியாளர்கள் சாந்தா, ஜோதி, அந்தோணி லூர்து ஆகியோர் செய்தனர்.

இது குறித்த நாளிதழ் செய்தி: 


Wednesday, March 21, 2012
அனைவருக்கும் "உலக வன நாள்" வாழ்த்துக்கள்

"பூமிப்பந்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள், இல்லைஎன்றால் எதிர்காலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அநேகம். இப்போதாவது விழித்துகொள்ளுங்கள்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசும் மக்களும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் நடுதல் நடைபெற்றாலும் இன்னும் முழுவீச்சில் இல்லை. விழிப்புணர்வு ஊட்டுவதிலேயே காலம் சென்றுக் கொண்டிருக்கிறது...

மரம் வெட்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும், . காடுகளில் மரங்கள் வெட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது...வனப்பகுதிகள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. மரங்கள் குறைந்ததால் மழை குறைந்து தண்ணீர் கிடைக்காமல்  வன விலங்குகள் நாட்டுக்குள் வரத் தொடங்கிவிட்டன...!? வனவிலங்குகள் பயிர்களை சேதபடுத்துகின்றன என்று சொல்ல தெரிந்த நமக்கு, அந்த விலங்குகளின் நிலையில் இருந்து யோசிக்க தெரியவில்லை .

சாலைகள் போடுவதற்கென்று வெட்டப்பட்ட மரங்கள் பல லட்சங்களை தாண்டும். சாலைகள் போட மரத்தை வெட்டியவர்கள் மீண்டும் அங்கே மரத்தை நட்டு பராமரிக்கவேண்டிய பொறுப்பையும் எடுத்துகொண்டால் நன்றாக இருந்திருக்கும். இதை முறைபடுத்தி இருந்தால் இன்று பல லட்சம் மரங்கள் உண்டாயிருக்கும். முக்கிய நாட்களில் மரம் நடுவதை ஒரு விழாவாக கொண்டாடுவதுடன் தங்களது சேவை முடிந்துவிட்டது என இருந்துவிடாமல் தொடர்ந்து அதனை பராமரித்து வளர்க்கும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதை மறக்கலாகாது.




உலக வன நாள் இன்று:

மரம் வெட்டாதே என்று சட்டங்கள், கட்டுப்பாடுகள் போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.

உலக வெப்பமயமாதல் குறித்து உலகமே கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்கிறோம், வளர்க்க சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், இதை சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்.

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் சொல்வதுடன் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை பற்றி படித்த போது மிக பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அத்தகைய சில ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.சங்க பாடல்கள் பல இருக்கின்றன அவற்றில் சில மட்டும் இங்கே...

 * நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டுபவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி இல்லை, இது குறித்து கொஞ்சம் யோசி " எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க,மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல் என்று சொல்லி இருப்பதை என்னவென்று சொல்ல...

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை " (திணைமாலை நூற்றைம்பது 61)

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

அவர்களின் வழி வந்தவர்கள் நாம் , இன்றைய பாஸ்ட் புட் உலகில் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டோம் , உங்கள் அனைவரையும் களத்தில் இறங்கி மரங்களை வளர்க்க சொல்லவில்லை , மரத்தின் அவசியத்தை உணருங்கள் காலம் தன் பணியை செய்யும் .




பசுமை விடியல் 
Tuesday, March 13, 2012
சென்னையை அடுத்த குன்றத்தூர் போகும் வழியில் உள்ள கொளப்பாக்கம் என்ற  ஊரில் கடந்த ஞாயிற்று கிழமை (11-03-2012) அன்று பசுமைவிடியல் இயக்கம் மரம் நடுவிழா நடத்தி 50 மரக்கன்றுகளை நட்டது. காலனி குடியிருப்போர் சங்கத்தினர், நண்பர்கள் துணையுடன் பசுமைவிடியலின் நிர்வாக இயக்குனர் திரு.செல்வகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு.கே ஆர்.பி.செந்தில் இருவரின் முயற்சியின் பேரில் நல்ல முறையில் மரகன்றுகள் நடப்பட்டது.



காலனி குடியிருப்புவாசியினர், உள்ளூர் நண்பர்கள் மற்றும் FFF நண்பர்கள் திரு .வசந்தகுமார் தனது நண்பருடன் வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். குடியிருப்புவாசிகளின் ஆர்வம் இத்துடன் முடிந்துவிடவில்லை, அனைவரும் ஒருமித்த குரலில், 'இன்னும் இங்கே அதிக மரங்களை நட்டு இந்த இடம் முழுவதையும் பசுஞ்சோலையாக மாற்றவேண்டும்' என்ற கோரிக்கை ஒன்றையும் வைத்து ஒரு வீட்டிற்கு இரண்டு மரக்கன்றுகள் என அதனை நாங்கள் பாராமரித்து கொள்கிறோம் என்றனர்.  அதனை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட பசுமைவிடியல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாட்டை விரைவில் தொடங்குவதாக உறுதி அளித்தனர்.



திரு.செல்வகுமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு முடித்ததும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றியும், மரங்களை பராமரிப்பதையும் பற்றியும் அவர்களிடம் விளக்கி கூறினார். அனைவரின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து திரும்பியது பசுமைபோராளிகளின் குழு.

'மழை மரக்கன்று'கள் (Rain Tree)நடப்பட்டன. இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், பகல் நேரத்தில் தனது மர பட்டைகளிலும், இலைகளிலும் ஈரபதத்தை  சேமித்து வைத்துகொண்டு இரவில் தூறல் போல உதிர்க்கும். இயன்றவரை பூமியை குளிர்விக்கும் தன்மை பெற்றது. நடும் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் மரக்கன்றுகள் தெரிவு செய்யபடுகிறது. நல்ல மரங்கள் எவை என ஒரு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில் மர கன்றுகளை வாங்கவேண்டும் என முடிவு செய்துள்ளோம்.



இங்கே நடைபெற்ற இந்த மரம் நடுவிழா ஒரு ஆரம்பம் தான். விரைவில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பலநூறு மர கன்றுகளை நடுவதாக இருக்கிறோம். அதற்கான திட்ட மதிப்பிடல், செயல் திட்ட வடிவமைப்பு தற்போது நடைபெற்றுகொண்டிருக்கிறது என்பதை ஒரு செய்தியாக சொல்லி கொள்கிறோம்.

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் ! 

Monday, March 5, 2012
                                                        திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் பேசுகிறார் 

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இயக்கத்தின் பொருளாளர் பொறியாளர் திரு.சுப்பிரமணியன், இயக்க செயலாளர் ஐ.கோபால்சாமி ,  மாவட்ட விவசாய கூட்டமைப்பு தலைவர் திரு ஜோசப், சிவந்திபுரம் பஞ்சாயத்து துணை தலைவர். திரு பிராங்கிளின் , திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் திரு.K. முருகன், சேனைத்தலைவர் பள்ளியின் தாளாளர் திரு லாரன்ஸ், அம்பை வட்டார காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு அம்பை ஆவுடையப்பன்,கலை, இலக்கிய பெருமன்ற தலைவர் திரு சிலம்புராமசாமி,கவுன்சிலர்.திரு.டேவிட் டேனியல், இயக்க துணைத்தலைவர். திருமதி விஜயா, துணை செயலாளர். திருமதி பிரபாவதி,  மேலும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள்,விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிதிகள், மகளிர் கூட்டமைப்பினர், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நதியை பற்றி வந்திருந்தவர்கள் பேசியவற்றில் இருந்து சில...


பொதிகையில் தொடங்கி தூத்துக்குடி புன்னைகாயல் வரை பயணித்து கடலில் சங்கமாகும் நதி தாமிரபரணி. தமிழ்நாட்டில்  33 நதிப்படுகைகளில் கொஞ்சம் உயிருடன் இருப்பது தாமிரபரணி மட்டுமே...தமிழ் நாட்டில் உருவாகி இங்கேயே கடலில் சங்கமாகும் ஒரே நதி இது . 50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட  நிலங்கள் தாமிரபரணி நதியால் பயன் பெறுகின்றன. இரண்டு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற சிறப்புமிக்க நதி இன்னும் சில வருடங்களில் செத்து போகக்கூடிய ஜீவநதி என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை கொள்கிறார்கள்.

20,000 ஆண்டுகள் காப்பாற்றப்பட்டு வந்த நதி இன்னும் இருபது ஆண்டுகளில் அழிய போகிறது...!! அமலை செடிகளின் ஆக்கிரமிப்பு, ஆஸ்பத்திரி கழிவுகள், தொழிற்சாலை கழிவு நீர், கொட்டப்படும் குப்பைகள், சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் இப்படி பலவும் நதியை பாழ்படுத்தி கொண்டிருக்கிறது. இவை எல்லாம் சேருவதால் குடிநீர் மாசு பட்டு குடிக்கவே தரமற்றதாகவும் போய்விடுகிறது. பொதிகைமலையின் அரிய மூலிகைகள் சேர்ந்த மிகவும் சுவையான நதி நீர் வழி நெடுகிலும் மாசுபட்டுக்கொண்டே சென்று ஸ்ரீவைகுண்டம் அருகே குடிக்க சரியில்லாத தண்ணீராக போய்விடுகிறது. நீர் பகுப்பாய்வை மேற்கொண்டதில் 1 லிட்டர் ஆற்று நீரில் 1750 நுண்கிருமிகள் மற்றும் பிற கழிவுகள் இருக்கிறதாம்...!!

நதியை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை, இது பொது சொத்து. அந்தந்த பகுதி மக்களுக்கானது. இதை பலரும் மறந்துவிடுவதால் அழிவினை நோக்கி போய் கொண்டிருக்கிறது நம் பொக்கிஷம். தவிரவும் பாபநாசம் பகுதியில் இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளின் போது அதிக அளவில் வஸ்திரம், பூமாலைகள், இலை, கவர்கள், காகிதங்கள், பாட்டில்கள்,உணவு மிச்சங்கள் போன்றவை மலையென குவிந்து கிடக்கிறது. தமிழக அறங்காவல் துறையினர் இதனை சிறிது ஒழுங்கு படுத்தினால் நல்லது, ஆனால் செய்வதில்லை. சுற்றுலாத் தலமான இங்கே  கழிப்பறை வசதிகள் சரியாக இல்லாததால் ஆற்றங்கரை, கோவில் பகுதிகளில் செய்யப்படும் அசிங்கங்கள் மிக அதிகம் !!


அடுத்து முக்கியமானது ஆற்றில் மண் எடுப்பது...தண்ணியை சுத்திகரிக்ககூடியது மண்...ஆனால் பல அடிகள் ஆழம் தோண்டி எடுக்கபடுகின்ற மண்ணினால் இந்த சுத்திகரித்தல் தடைபடுகிறது. தவிரவும் ஆழம் இருப்பது தெரியாமல் அந்த குழிகளில் விழுந்து மாண்டவர்கள் பலர். இங்கிருந்து கேரளாவிற்கு அதிக அளவில் மண் செல்கிறது, அங்கே ஆறுகளில் மண் எடுக்க மாட்டார்கள், எடுபவர்களுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க படுகிறது. ஆனால் இங்கே மண் எடுப்பவர்களை தடுத்தால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர் !!! வீரவநல்லூர் கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் மண் எடுப்பதை எதிர்த்ததால் சமூக விரோதிகளால் கொல்ல பட்டார்...!?   

மணல் எடுப்பதற்காக ஆற்றுக்குள் சாலை போடப்படுவது சகஜமாகி விட்டது.கீழநத்தம் பகுதியில் ஒரு பாலமே போட்டு மணல் எடுத்து செல்லபடுகிறது.இதன் வழியாக 200 மணல் லாரிகள் வரை தினம் பயணிக்கின்றன...இந்த சாலைகள் மிக நேர்த்தியாக போடபட்டிருக்கின்றன...இச்சாலைகளை சரியாக பராமரித்து வரவேண்டும் என்று சில அதிகாரிகள் சொல்வது அதிக பட்ச நகைச்சுவை !!

மணல் அள்ளுவதற்கு எதிராக திரு நல்லகண்ணு அவர்கள் கோர்ட்டில் போட்ட வழக்கின் தீர்ப்பின் படி,

ஆற்றின் குறுக்கே போட பட்ட சாலைகளை அகற்றணும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆற்றை கண்காணிக்க 'கண்காணிப்பு குழு' அமைக்க சொல்லப்பட்டதும் நிறைவேற்றப்படவில்லை

மணல் அள்ளக்கூடாது என்று போடப்பட்ட தடையே 5 ஆண்டுகள் தான் அதில் 2  ஆண்டுகள் முடிந்தும் ஏதுவும் இன்றுவரை சரியாக நிறைவேற்றப்படவில்லை.

ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் 

திருவள்ளுவர் கல்லூரி முதல்வரும், சேனைத் தலைவர் பள்ளியின் தாளாளர் திரு லாரன்ஸ் இருவரும் பாதுகாப்பு இயக்கத்தின் அனைத்து பணிகளிலும் உடன் இருப்பதாகவும், களப்பணியில் தங்களது மாணவர்களை ஈடுபடுத்தி கொள்ள முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது அனைவரின் வரவேற்ப்பை பெற்றது. அதிலும் திரு லாரன்ஸ் அவர்கள் இந்த இயக்கத்தை மாணவர்கள் இயக்கமாக மாற்றினால் இன்னும் சிறப்பு என்றார். 

பொதிகை முதல் புன்னைகாயல் வரை 1 லட்சம் நபர்களை சந்திக்க வேண்டும். வருகிற மார்ச் 8 அன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு வழக்கமாக நடக்கும் பெண்கள் பேரணி இந்த தாமிரபரணி பாதுகாப்புக்காக நடைபெற வேண்டும் என்று ஆலோசனை சொல்லப்பட்டு உடனே முடிவும் செய்யப்பட்டது. இந்த ஆண்டை விழிப்புணர்வு ஆண்டாக எண்ணி கொண்டு அனைவரும் செயல்படவேண்டும் எனவும் ஆலோசனைகள் சொல்லப்பட்டது.

ஆலோசனை கூட்டம் நல்லவிதமாக நடைபெற்று முடிந்தது. இறுதியில் மூன்று தீர்மானங்கள் போடபட்டு நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

* விக்கிரமசிங்கபுரத்தில் இருக்கும் ஆலை கழிவு நீரை சுத்திகரித்து தான் ஆற்றில் விடுகிறோம் என்று கூறிகொண்டிருக்கிறது. ஆனால் இதில் உண்மை இல்லை என்பதே பலரது கருத்து. அவ்வாறு சுத்திகரித்து தான் ஆற்றில் விடபடுகிறதா என கண்காணிக்க மக்கள் இயக்கத்தை அனுமதிக்க வேண்டும்.

* ஊரின் பல பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆற்றில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது.

* பாபநாசம் முதல் சிவந்திபுரம் வரை மாபெரும் பேரணி ஒன்றை மார்ச் 29 அன்று நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த மூன்று தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

பல கட்சியினர்கள் பங்குகொண்டாலும், வந்திருந்த யாரிடமும் கட்சி அடையாளங்கள் இல்லை. அவர்களுக்குள் நதி குறித்த கவலை மட்டும் தான் தெரிந்தது. 'அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நடைபெறும் பேரணிக்கு வரவைக்கலாம், அந்த பொறுப்பை நான் ஏற்றுகொள்கிறேன்' என்று சொன்னது எம்.எல்.ஏ கட்சியை சார்ந்தவர் அல்ல...! தினகரன் பத்திரிக்கைதான் ஆற்றினை குறித்து தொடர்ந்து செய்தி வெளியிடுவதாக கூறியவர் வேறு கட்சியை சேர்ந்தவர். இவ்வாறு அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்கள் காட்டிய ஆர்வம் போற்றுதற்குரியது.

தாமிரபரணி கூவமாக மாறிவிடும் முன் காப்பாற்றப்படவேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக அங்கே ஒலித்தது.

ஒரு நல்ல முயற்சியின் ஒரு நல்ல தொடக்கமாக இந்த ஆலோசனை கூட்டம் இருந்தது.